கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி, பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய சோதனையில் அனைத்தும் போலி மிரட்டல்கள் என தெரியவந்தது.
இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதேபோல் மிரட்டல்கள் வந்த நிலையில், தொழில்நுட்ப விசாரணையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியம் சங்கர் என்பவர் சிக்கினார். அமெரிக்காவில் மென்பொருள் என்ஜினீயராக பணியாற்றிய இவர், அண்மையில் சென்னை திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
கோவையில் இவர் மீது 3 சைபர் கிரைம் வழக்குகள் நிலுவையில் இருந்ததால், தனிப்படை போலீசார் அவரை கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.