மேட்டுப்பாளையம், அக்.13: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள கூடுதல் தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திட்ட மாவட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் தாலுகா பொது தொழிலாளர் சங்கத்தின் சிஐடியு பொதுச் செயலாளர் எஸ். பாஷா, மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி அரசுக்குப் புகார் அனுப்பியிருந்தார்.
மேட்டுப்பாளையம் பகுதியில் ஏழை, எளிய மக்கள், பழங்குடியினர், பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிகம் வசிப்பதால், அவர்கள் பயன்பெறும் வகையில் தனியார் மருத்துவமனைகளிலும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற வசதி ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மாவட்ட அலுவலர், தற்போது மேட்டுப்பாளையம் வட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் மட்டுமே இத்திட்டம் செயல்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், கோரிக்கையின் அடிப்படையில் கூடுதல் தனியார் மருத்துவமனைகளிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.