கோவை, அக்.22: கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க, ஐந்து மண்டலங்களிலும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் தேக்கம் தொடர்பாகப் பெறப்பட்ட 60 புகார்களும் சரிசெய்யப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆய்வு செய்யப்பட்ட பகுதிகள்:
அவிநாசி ரோடு மேம்பாலம், காளீஸ்வரா மில் அருகே, கிக்கானி பள்ளி அருகேயுள்ள சுரங்கப்பாதை, நெசவாளர் காலனி சுரங்கப்பாதை, சாய்பாபா காலனி மேம்பாலச் சாலை, மருதமலை மெயின் ரோடு, எம்.ஜி.ஆர். நகர், நீலிக்கோணம்பாளையம் சுரங்கப்பாதை, குறிச்சி பஸ் நிறுத்தம், துடியலூர் – சரவணம்பட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் அகற்றப்பட்டது.

மாநகராட்சி நடவடிக்கைகள்:
ஜே.சி.பி., பொக்லைன், சகதி உறிஞ்சும் லாரிகள், தண்ணீர் லாரிகள் மற்றும் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் அகற்றுதல், வடிகால் அடைப்புகளைச் சீரமைத்தல், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் களத்தில் ஈடுபட்டனர்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தினர்.
மாநகராட்சியின் 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.