கோவை, அக்.23: கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்பில் உள்கட்டமைப்பு மேம்பாடு, கூடுதல் ரயில் சேவைகள், பயணிகள் வசதிகள் மற்றும் புறநகர் ரயில் இணைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் சேலம் கோட்ட ரயில்வே மேலாளரை கோயம்புத்தூர் என்எக்ஸ்டி குழுவினர் சந்தித்து வலியுறுத்தினர்.

கொங்கு குளோபல் ஃபோரத்தின் துணைத் தலைவர் வனிதா மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை தலைவர் துரைராஜ், சிஐஐ தலைவர் நவுஷாத், ராக் அமைப்பின் தலைவர் பாலசுப்ரமணியன், சிறுதுளி அறங்காவலர் சதீஷ், சுங்கத் தரகர்கள் மற்றும் கப்பல் முகவர்கள் சங்கப் பிரதிநிதி திலீப் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், ஐசிசிஐசி துணைத் தலைவர்கள் சஞ்சனா விஜயகுமார், நடராஜன், முன்னாள் தலைவர் பாலசுந்தரம், செயலாளர் பிரதீப், சிறுதுளி வழிகாட்டுதல் குழு உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை – சென்னை வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், கோவை – திருவனந்தபுரம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்குதல், தென் மாவட்டங்களுக்கான நேரடி ரயில் இணைப்பை மீண்டும் ஏற்படுத்துதல், கோவை சந்திப்பைத் தவிர்த்துச் செல்லும் ரயில்களை மாற்றுப் பாதையில் இயக்குதல் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கோவை சந்திப்பு மற்றும் போத்தனூர் சந்திப்பை கூடுதல் தீவு நடைமேடைகள் அமைத்து முனைய அந்தஸ்து வழங்குதல், இருகூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பீளமேடு உள்ளிட்ட நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகளைக் கேட்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர், அவற்றைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.